கொலம்பியாவில் நேற்று 7.4 ரிக்டர் அளவிற்கான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 1,575-க்கும் அதிகமான வீடுகளும், ஆறு விமான நிலையங்களும் சேதமடைந்துள்ளன. இதனால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கொலம்பியாவில் உள்ள சோகோ மாகாணத்தில் இருக்கும் சான் ஜோஸ் டெல் பால்மர் அருகே 96 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கொலம்பியா புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தேசிய பேரிடராக கொலம்பியா அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ள நிலையில் 570-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கொலம்பியா அரசு தெரிவித்திருக்கிறது.




