தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் கட்டாயமாக விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு காவல்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணி பாதுகாக்க ஏதுவாகவும், தங்களது குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடவும் வாரத்தில் ஒருநாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காவலர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும், தமிழக காவல்துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமணநாள் வாழ்த்துச் செய்தி, மாவட்ட/மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு IPS குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த அறிவுரையை அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.