முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் புதிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய டிஜிபியாக, ரயில்வே டிஜிபி சைலேந்திர…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய டிஜிபியாக, ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு நேற்று (29-06-2021) உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் டிஜிபியாக பொறுப்பேற்க இன்று காலை 11 மணிக்கு சென்னை காமராஜர் சாலையிலுள்ள காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு வந்த சைலேந்திரபாபுவை அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர், திரிபாதியிடம் இருந்து பொறுப்புகளை சைலேந்திரபாபு பெற்றுக்கொண்டார். தமிழ்நாட்டில் 30வது டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு 2022ம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை பதவியில் நீடிப்பார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சைலேந்திர பாபு, காவலர்கள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் மனித உரிமைகளை மதித்து நடந்து கொள்வதற்கான பயிற்சியும் காவலர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து இன்று மாலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ஜே.கே. திரிபாதி மற்றும் புதியதாக பொறுப்பேற்ற சைலேந்திர பாபு ஆகியோர் வந்தனர். முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப்பெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தான் எழுதிய ‘உங்களுக்கான 24 போர் விதிகள்’ என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார். இன்றுடன் ஓய்வுபெறும் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதியும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்துப்பெற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.