கல்வி மட்டுமே யாராலும் திருட முடியாத சொத்து, கல்வியை அடைய எத்தகைய தடைகளையும் உடைத்தெறிவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விடுதி வளாகத்தில் 10 தளங்களுடன் 44 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
இந்த நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இன்னார் படிக்கலாம் இன்னாரெல்லாம் படிக்கக் கூடாதென இருந்த சமூக ஒடுக்குமுறையை ஒழிக்கக் கிளர்ந்தெழுந்தது திராவிட இயக்கம். கல்வியைத் தேடிச் சென்னை வரும் நமது மாணவர்கள் தங்கியிருக்க ‘திராவிடர் இல்லம்’ நிறுவினார் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான நடேசனார்.
கல்வி மூலமாகவே ஒடுக்கப்பட்டோர் வளர்ச்சி காண முடியும் என உரிமை முழக்கம் செய்து, இரவுப் பள்ளிகளையும் விடுதிகளையும் தொடங்கினார் எம்.சி.ராஜா. அவரது பெயரில் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கிப் பயில, 1961-இல் விடுதி அமைத்தார் பெருந்தலைவர் காமராஜர்.
அந்த விடுதியை நவீன வசதிகளுடன் புதுப்பித்துக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி, மாணவர்களுடன் உரையாடினேன். மாணவர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல், கல்வி மட்டுமே நம்மைக் காக்கும் சொத்து… கல்வியை அடைய எத்தகைய தடைகளையும் உடைத்தெறிவோம் என முதலமைச்சர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








