ரயில் வழித்தடங்கள் பராமரிப்பு பணி காரணமாக சென்னை, புதுச்சேரி, ராமேசுவரம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திருப்பதி செல்லும் சில ரயில்கள் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 9.50 மற்றும் மாலை 4.35 மணிக்கு திருப்பதி செல்லும் ரயில்கள் (எண்கள் 06727,16203), மறுமார்க்கமாக திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.35 மற்றும் காலை 6.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில்கள் (எண்கள் 06728,16204) இன்று (ஜூலை 12) முதல் ஆக.10 -ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த தேதிகளில் அரக்கோணம் – திருப்பதி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலும் (எண்கள் 06753, 06754) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
விரைவு ரயில்களை பொறுத்தவரை திருப்பதி – புதுச்சேரி விரைவு ரயில் (எண்கள் 16111/16112), ஜூலை 12 முதல் ஆக.11- ஆம் தேதி வரை ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும். மீண்டும் ரேணிகுண்டாவிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி சென்றடையும்.
சென்னை சென்ட்ரல் – திருப்பதி விரைவு ரயில்கள் (எண்கள் 16057/16058 மற்றும் 16054/16053) புதன்கிழமை (ஜூலை 12) முதல் ஆக.10 ஆம் தேதி வரை ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும். பின்னர் ரேணிகுண்டாவிலிருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
மேலும், விழுப்புரம் – திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (எண்கள் 16854/16853) புதன்கிழமை (ஜூலை 12) முதல் ஆக.10 -ஆம் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும். பின்னர் காட்பாடியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும்.
ராமேசுவரம் – திருப்பதி இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் விரைவு ரயில் (எண்கள்: 16780/16779) ஜூலை 13 முதல் ஆக.10-ஆம் தேதி வரை பாகாலாவுடன் நிறுத்தப்படும். பின்னர் பாகாலாவிலிருந்து புறப்பட்டு ராமேசுவரம் சென்றடையும்.
காச்சிகூடா – மதுரை இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (எண்கள் 07191/07192) ஜூலை 12 முதல் ஆக.9-ஆம் தேதி வரை திருப்பதி, சித்தூர் வழியாக செல்வதற்கு பதிலாக மேலபாக்கம் வழியாக இயக்கப்படும்.
தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பால் ஏற்கனவே திருப்பதிக்கு செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் இடையூறுக்கு ஆளாகியுள்ளனர். சில ரயில்கள் ரேணிகுண்டா, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளோடு இடையிலேயே நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே திருப்பதி வரை டிக்கெட் முன்பதிவு செய்தோர், சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.







