“உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம்” – பிரதமர் மோடி!

ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்களால் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதையொட்டி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நடைபெறக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடர் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் குடியரசு தலைவர் நிகழ்த்திய உரை 140 கோடி இந்திய மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைந்திருந்தது.

குறிப்பாக இளைஞர்களின் இலட்சியங்களை மிகத் துல்லியமாக வலியுறுத்தும் வகையாக இருந்தது. 21ம் நூற்றாண்டின் கால் பகுதி கடந்து அதன் இரண்டாம் காலாண்டு தொடங்கியுள்ளது. நாம் 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கு முக்கியமான 25 ஆண்டு காலகட்டம் தொடங்குகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.

கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பார்கள் என எதிர்பார்கிறேன். நாடாளுமன்றத்தில் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் பெருமையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்களால் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. உலகத்தின் நம்பிக்கையாக தற்போது இந்தியா வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

இளைய சமுதாயம், சேவை துறையினரை மனதில் வைத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கு அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிக முக்கியம்.
ஜி.எஸ்.டி. வருவாயில்1.65 லட்சம் கோடியை திரட்டி சாதனை படைத்திருக்கிறோம். 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம். பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு நீண்ட கால வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ளது. நீண்ட கால பிரச்சனை என்ற நிலையில் இருந்து நீண்ட கால தீர்வு என்ற நிலையை நோக்கி இந்தியா பயணிக்கிறது. ​​நாம் ‘சீர்திருத்த எக்ஸ்பிரஸில்’ அதிவேகமாகப் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். இந்த ‘சீர்திருத்த எக்ஸ்பிரஸ்’ வேகத்தை அதிகரிப்பதில் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை வழங்கிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது வரவிருக்கும் காலமும், இந்திய இளைஞர்களின் எதிர்காலமும் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது. குறிப்பாக, இந்தியாவின் உற்பத்தியாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் திறன்களை மேம்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். உணர்வுபூர்வமான அணுகுமுறையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, தொழில்நுட்பத்துடன் இணைந்து நாம் முன்னேறிச் செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.