கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவக் கட்டமைப்புகள் தயாராக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர்கள்…

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவக் கட்டமைப்புகள் தயாராக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும் எனக் கூறினார். உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து கண்டறிய தமிழ்நாட்டில் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 1,908 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர். 2,047 பேர் குணமடைந்துள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 25,65,452 ஆக அதிகரித்துள்ளது. 25,11,076 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 34,159 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 20,217 பேர் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 208 பேரும், சென்யைில் 202 பேரும், ஈரோட்டில் 181 பேரும், செங்கல்பட்டில் 122 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.