சிறுமியை கடத்தி விபசாரத்தில் தள்ளியதாக தொடரப்பட்ட வழக்கில் ஒரு பெண் உள்பட இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, இளங்கோவன் இருவரும் 18 வயதுக்கு குறைவான சிறுமியை கடத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்தி விற்பனை செய்துள்ளதாக புகார் வந்தது. இதனையடுத்து இருவரையும் காவல் விசாரணை மற்றும் கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டு வந்தது காவல்துறை.
இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி மேற்கொண்ட தீவிர விசாரணையில் புகார் உண்மையென தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணவேணி, இளங்கோவன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் சிபிசிஐடி ஆஜர்படுத்தியது.
இந்த வழக்கில் சிறுமியை கடத்திய குற்றச்சாட்டுக்கு இருவருக்கும் ஒரு ஆயுள் தண்டனை, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டுக்கு ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ராஜலட்சுமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.








