அமைதியான கோவையே மக்களின் தேவை என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக வகுப்புவாத அமைப்புகளின் நடவடிக்கை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையிலான அனைத்துக் கட்சியினர் காவல் துறை கூடுதல் இயக்குநர், மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நேரில் வலியுறுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வகுப்புவாத அமைப்புகளின் நடவடிக்கையால் தொடர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமைதியான கோவையே மக்களின் தேவை எனும் முறையில் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில், காவல் துறை கூடுதல் இயக்குநர், கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் துறை ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து கோவையின் அமைதி வலியுறுத்தப்பட்டது.
இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் எம்.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சிவசாமி, மதிமுக நிர்வாகி சேதுபதி, தபெதிக தலைவர் கு.ராமகிருட்டிணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன், திவிக தலைவர் நேருதாஸ், தமிழ் புலிகள் கட்சி இளவேனில் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் சந்தித்தனர்.
இதில், மண்ணெண்ணெய் குண்டு வீசியவர்களை உடனடியாக கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையில் 29 ஆம் தேதி மாநில தலைவர்கள் பங்கேற்கும் பேரணி பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா