சாதி பெயரை வைத்து அவமதிக்கிறார்கள் – பெண் பஞ்சாயத்து தலைவர் புகார்

கரூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோர் சாதி பெயரை சொல்லி தன்னை அவமதிப்பதாக பட்டியலின சமூகத்தை சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கரூர்…

கரூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோர் சாதி பெயரை சொல்லி தன்னை அவமதிப்பதாக பட்டியலின சமூகத்தை சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கரூர் மாவட்டம் நன்னியூர் ஊராட்சி தலைவராக பட்டியலின சமூகத்தை சேர்ந்த சுதா என்பவர் செயல்பட்டு வருகிறார். அந்த கிராமத்தில் ஊராட்சி கூட்டம் நடைபெற்ற போது 2வது வார்டு உறுப்பினர் நல்லுசாமி என்பவர் சுதாவை சாதியின் பெயரைச் சொல்லி திட்டியுள்ளார்.

இதே போன்று, முன்னாள் ஊராட்சி தலைவர் குமாரசாமி, அலுவலகத்திற்குள் வந்து அமர்ந்து கொண்டு ஆவணங்களை எடுத்து பார்ப்பதுடன் உனக்கு ஒன்றும் தெரியாது. நான் சொல்வதை செய் என அதிகார தோரணையில் என் பணியினை செய்ய விடாமல் தொந்தரவு செய்கிறார்.  ஊராட்சி செயலாளர் நளினி தன்னை மதிப்பது இல்லை. ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வரும் தகவல்களை தனக்கு தெரிவிப்பது இல்லை. என்னை அவமதிக்கும் விதமாக தொடர்ந்து நடந்து வருகிறார் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் ஊராட்சி தலைவர் சுதா புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, நேற்று ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் இது குறித்து கேட்டறிந்தார். பிறகு, ஊராட்சிமன்ற தலைவர் சுதா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.