டெல்லியில் நவம்பர் 30ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இதில் தொகுதி மறுவரையறை தொடர்பான திருத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவுக்கு நேற்று அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுகவின் செயல்பாடுகள் குறித்தும், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் திமுக எம்.பி. ஆ. ராசா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்கும். நியாயமான தொகுதி மறுவரையறை (Fair Delimitation) என்பதால் தற்போது மட்டுமல்ல, எப்போதுமே திமுக ஆதரித்து வந்துள்ளது. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாடு என்பது புதிய முடிவு அல்ல; அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவும் அல்ல.
அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தும் மசோதாவுக்கு ஆதரவளிக்கும். ஆழ்ந்த சிந்தனையோடு, தேசத்திற்கு எது நல்லது, தமிழ்நாட்டுக்கு எது நல்லது எனச் சிந்தித்து முடிவெடுத்துள்ளோம். தற்போதுள்ள தொகுதி எண்ணிக்கை விகிதாசாரத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கும் மாற்றமின்றித் தொடர வேண்டும்.
7.21 என்ற அளவில் தமிழகத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் உயர்கிறது என்பதை திமுக கவனத்தில் கொண்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 என்ற அளவில் இருக்கும் நிலையில், புதிய மசோதாவில் அது 7.21 ஆக உயர்கிறது. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதம் என்ற அளவில் குறையாது என்பதால் ஆதரவு அளித்துள்ளோம். நியாயமான தொகுதி மறுவரையறை என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக உள்ளது. மத்திய அரசு கொண்டுவரும் தற்போதைய மசோதாவால் தமிழகத்துக்குப் பாதிப்பில்லை” என்று அவர் கூறினார்.




