இந்தியாவுக்கு மாறும் ஜாரா, எச் அண்ட் எம் நிறுவனங்கள்!
வங்கதேசத்தில் தொழிலாளர் போராட்டம், அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக ஜாரா (Zara), எச் அண்ட் எம் (H&M) உள்ளிட்ட சர்வதேச ஆடை விற்பனை நிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆர்டர்களில் கணிசமான பகுதியை மற்ற ஆசிய நாடுகளுக்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 1 முதல் 18 வரையிலான காலகட்டத்தில் மாற்றப்பட்ட ஆர்டர்கள், நிறுவனங்களின் மொத்த ஆர்டர்களில் சுமார் 10 சதவீதமாகும்.
இவற்றின் மதிப்பு சுமார் 254 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,150 கோடி) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்டர்களில் பெரும்பாலானவை இந்தியாவுக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், விநியோகச் சங்கிலியில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, சரியான நேரத்தில் பொருட்களை விநியோகிப்பதை உறுதி செய்வதற்காக வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளையும் சர்வதேச நிறுவனங்கள் நாடியுள்ளன.
தொழிலாளர் போராட்டத்தால் ரூ.3,400 கோடிக்கு மேல் இழப்பு!
உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆடை ஏற்றுமதி நாடாக, சீனாவுக்கு அடுத்த இடத்தில் வங்கதேசம் உள்ளது. குறைந்த உற்பத்திச் செலவு அந்நாட்டின் ஆடைத் தொழில் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்து வந்தது. ஆனால், தற்போது அதிகரித்து வரும் தொழிலாளர் ஊதியம், எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் அரசியல் நிச்சயமற்ற சூழல் ஆகியவை வங்கதேசத்தின் குறைந்த செலவிலான உற்பத்தி என்ற போட்டித்தன்மையைப் பாதித்துள்ளன.
வங்கதேச ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (Bangladesh Garment Manufacturers and Exporters Association) தகவலின்படி, தொழிலாளர் போராட்டங்களால் 400 மில்லியன் டாலருக்கும் அதிகமான உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,400 கோடிக்கும்அதிகமாகும். வங்கதேசத்தின் மொத்த ஏற்றுமதி வருவாயில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை ஆடைத் தொழில் வழங்குகிறது. மேலும், அந்நாட்டின் உற்பத்தித் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளில் சுமார் 40 சதவீதம் இந்தத் துறையைச் சார்ந்துள்ளது.
36 சதவீத ஊதிய உயர்வு: தொடரும் போராட்டம்!
வங்கதேசத்தில் ஆடைத் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, கடந்த (நவம்பர் 25) புதன்கிழமை தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை 36 சதவீதம் உயர்த்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்தது. கடந்த 40 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட மிகக் குறைந்த ஊதிய உயர்வு இதுவாகும். ஆனால், தற்போதைய ஊதியத்தை விட இருமடங்குக்கும் அதிகமான தொகையை உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையைவிட அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு மிகவும் குறைவாக இருந்ததால், மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. இதனால் காவல்துறையினருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இருப்பினும், இந்த ஊதிய உயர்வு திருப்திகரமாக இருப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் அப்துர் ரஹ்மான் தரஃப்தார் தெரிவித்துள்ளார். மேலும், சனிக்கிழமை முதல் அனைத்து தொழிலாளர்களும் பணிக்குத் திரும்புவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஊதிய உயர்வு காரணமாக இந்தியாவுடன் ஒப்பிடும்போது வங்கதேசத்தின் தொழிலாளர் செலவு சார்ந்த போட்டித்தன்மை குறையும் என்று தொழில்துறை தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், சர்வதேச ஆடைத் தொழில்துறையின் தரத்துடன் ஒப்பிடும்போது திருத்தப்பட்ட ஊதியம் இன்னும் குறைவாகவே இருப்பதாகத் தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன. இந்தப் போராட்டங்களால் ஜாரா, எச் அண்ட் எம், மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் (Marks & Spencer), செலியோ (Celio) உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஆர்டர்களை மற்ற நாடுகளுக்கு மாற்றியுள்ளதாகத் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலான ஆர்டர்கள் இந்தியாவுக்குச் சென்றுள்ளன.
எரிசக்தி தட்டுப்பாடு: உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பாதிப்பு!
வங்கதேசத்தில் நிலவும் போராட்டங்கள் முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பினாலும், தற்போது மற்ற நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ள ஆர்டர்கள் மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்பாமல் நிரந்தரமாக அங்கேயே சென்றுவிடுமோ என்பதுதான் தொழிற்சாலை உரிமையாளர்களின் முக்கியக் கவலையாக உள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியால் மேலும் மோசமடைந்துள்ள எரிசக்தி தட்டுப்பாடு, வங்கதேசத்தின் ஆடை உற்பத்தியைப் பெரிதும் பாதித்துள்ளது.
இதனால் சில தொழிற்சாலைகள் அதிக செலவிலான மாற்று மின்சார ஆதாரங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆடை உற்பத்தி மற்றும் விநியோக காலத்தைப் பொறுத்தவரை இந்தியா சர்வதேச நிறுவனங்களுக்கு சுமார் ஒரு வார கால முன்னுரிமையை வழங்க முடியும். அதேபோல், வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் விநியோகக் காலத்தை 15 நாட்கள் வரை குறைக்க முடியும். போட்டியிடும் நாடுகளில் பொதுவாக 60 முதல் 90 நாட்களுக்குள் ஆடைகளை உற்பத்தி செய்து விநியோகிக்க முடிகிறது. ஆனால், வங்கதேசத்தில் இதற்கு சுமார் 120 நாட்கள் தேவைப்படுகின்றன.
நிரந்தரமாக ஆர்டர்கள் கைமாறும் அபாயம்!
தொழில்துறை பாதிப்புகளால் தலைநகர் டாக்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகள் சுமார் 20 முதல் 25 உற்பத்தி நாட்களை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நிலுவையில் உள்ள ஆர்டர்களை முடிப்பதற்காக சில தொழிற்சாலைகள் கூடுதல் நேரம் பணியாற்றவும், விமானம் மூலம் பொருட்களை அனுப்பவும் திட்டமிட்டு வருகின்றன.
இதற்கிடையே, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் இருந்து மீண்டும் டாக்கா திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான அரசியல் பதற்றமும் அந்நாட்டில் மேலும் பாதிப்புகள் ஏற்படலாம் என்ற கவலையை அதிகரித்துள்ளது. சர்வதேச நிறுவனங்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ளவும், உற்பத்தி மற்றும் விநியோகப் பணிகள் தடையின்றி நடைபெறவும் வங்கதேசத்தில் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட வேண்டும் என்று அந்நாட்டின் ஆடைத் தொழில்துறை தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




