சீனா-பாகிஸ்தான்-துருக்கி ராணுவக் கூட்டணி: இந்தியாவுக்கு புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்?

சீனா, பாகிஸ்தான், துருக்கி இடையிலான வளர்ந்து வரும் ராணுவ ஒத்துழைப்பால் இந்தியாவின் பாதுகாப்புக்கு புதிய சவால்கள் உருவாகியுள்ளதாக
முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி எச்சரித்துள்ளார்.

சீனா உதவியுடன் அதிகரிக்கும் பாகிஸ்தானின் விண்வெளித் திறன்!

பாகிஸ்தானின் விண்வெளித் திறன்கள் சீனாவின் உதவியுடன் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும், துருக்கியின் ஆதரவும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி தெரிவித்துள்ளார். விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையில் (Vivekananda International Foundation) நடைபெற்ற ‘போர்முறையின் எதிர்காலம் மற்றும் பல்வேறு களங்களில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இந்தியாவின் தயார்நிலை’ (Future of Warfare and India’s Preparedness to Conduct Multi-Domain Operations) என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், பாகிஸ்தானின் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனமான SUPARCO, சீனாவின் உதவியுடன் தனது விண்வெளித் திட்டத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். அதேநேரத்தில், உள்நாட்டிலேயே விண்வெளித் தொழில்நுட்பத் திறன்களை உருவாக்கும் முயற்சிகளிலும் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். மேலும், பாகிஸ்தானுக்கு துருக்கியின் ஆதரவும் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

சீனா, பாகிஸ்தான், துருக்கி ராணுவ உறவு: இந்தியாவுக்கு சவால்!

சீனா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவது இந்தியாவின் பாதுகாப்பு மதிப்பீட்டில் முக்கியக் காரணியாக மாறியுள்ளதாக ஜெனரல் ராஜா சுப்பிரமணி தெரிவித்தார். குறிப்பாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போதும், அதற்குப் பின்னரும் இந்த மூன்று நாடுகளும் நெருக்கமான உறவை வளர்த்துக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். சீனாவிடம் உள்ள மேம்பட்ட உளவுத் தகவல் சேகரிப்பு, கண்காணிப்பு மற்றும் உளவு அறிதல் (Intelligence, Surveillance and Reconnaissance – ISR) திறன்களையும், நிலைநிறுத்துதல், வழிகாட்டுதல் மற்றும் நேரக் கணிப்பு (Positioning, Navigation and Timing – PNT) தொழில்நுட்பங்களையும் பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்தார்.

இதன் மூலம் பாகிஸ்தானின் களச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் திறனும், போர்க்களத்தில் செயல்படும் திறனும் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்தார். சீனாவிடம் இருக்கும் இத்தகைய தொழில்நுட்பத் திறன்களைப் பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை இந்தியா தனது ராணுவத் திட்டமிடலில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், இதற்குப் பதிலடியாக இந்தியாவின் கண்காணிப்பு மற்றும் விண்வெளி சார்ந்த பாதுகாப்புக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

52 ராணுவ செயற்கைக்கோள்கள்: இந்தியாவின் அதிரடித் திட்டம்!

வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள, விண்வெளி சார்ந்த கண்காணிப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டமான Space Based Surveillance (SBS) Phase-III திட்டத்தின் முக்கியத்துவத்தை ஜெனரல் ராஜா சுப்பிரமணி எடுத்துரைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் 52 பிரத்யேக ராணுவ செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. கடந்த 2024 அக்டோபரில் மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக்கான குழு (Cabinet Committee on Security) இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

பாதுகாப்பு விண்வெளி முகமை (Defence Space Agency) மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைமையகம் (Headquarters Integrated Defence Staff) ஆகியவற்றின் மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மொத்தம் ரூ.26,968 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ (ISRO) 21 செயற்கைக்கோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்த உள்ளது. மீதமுள்ள 31 செயற்கைக்கோள்களைத் தனியார் நிறுவனங்கள் உருவாக்க உள்ளன. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்புத் திட்டங்களில் தனியார் துறையின் பங்களிப்பும் அதிகரிக்க உள்ளது.

செயற்கைக்கோள்களைத் தாக்கும் சீனாவின் தொழில்நுட்பம்!

சீனாவின் விண்வெளித் திறன்கள் வேகமாக வளர்ந்து வருவதையும் ஜெனரல் ராஜா சுப்பிரமணி சுட்டிக்காட்டினார். செயற்கைக்கோள்களைச் செயலிழக்கச் செய்யும் அல்லது குறிவைத்துத் தாக்கும் திறன் கொண்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களைச் சீனா உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் வழிகாட்டுதல் கட்டமைப்புகளில் குறுக்கீடுகளை ஏற்படுத்தக்கூடிய செயற்கைக்கோள் எதிர்ப்பு (Anti-Satellite) அமைப்புகள் மற்றும் மின்னணுப் போர் (Electronic Warfare) தொழில்நுட்பங்கள் சீனாவிடம் இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது.

இத்தகைய சூழலில், நவீன போர்முறைகளில் நிலம், கடல், வான்வெளி ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்துவதைப் போலவே விண்வெளியிலும் ஆதிக்கம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாக மாறி வருவதாக அவர் தெரிவித்தார். எனவே, மாறிவரும் போர்ச் சூழலுக்கு ஏற்ப இந்தியா தனது விண்வெளி, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்து, ராணுவத் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்றும் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.