இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வென்றதை சாதனையாக கருதவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்தார்.
டி 20 உலகக்கோப்பை போட்டி துபாயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் நேற்று மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரின் 4வது பந்திலேயே ஷாகின் அப்ரிடியின் பந்துவீச்சில் ரான் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் ரோகித் சர்மா. அடுத்து கே.எல்.ராகுல் 3 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 11 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிலைத்து நின்று ஆடிய விராத் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. விராத் கோலி 49 பந்துகளில் 57 ரன்களும் ரிஷப் பண்ட் 39 ரன்களும் எடுத்தனர்.
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இந்தியாவின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு நிதானமாக ரன்களை சேர்க்கத் துவங்கினர். 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்களை எடுத்தது பாகிஸ்தான் அணி. பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இருவரும் அரை சதத்தை கடக்க, இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான். 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
பாபர் அசாம் 68, முகமது ரிஸ்வான் 79 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் முதல்முறையாக வெற்றிபெற்று சாதனை பெற்றுள்ளது. மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாகின் ஷா அப்ரிதி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
போட்டிக்குப் பின் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது: நாங்கள் எங்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினோம். வேகப் பந்துவீச்சாளர் ஷாகின் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் வீழ்த்தியது நம்பிக்கை அளித்தது. சுழல் பந்துவீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்தினார்கள். ரிஸ்வானும் நன்றாக ஆடினார். 8 வது ஓவருக்குப் பிறகு பனியின் தாக்கம் ஏற்பட்டது. இதனால் பேட்டிங்கிற்கு உதவியாக இருந்தது. இது தொடக்கம் மட்டுமே. எங்கள் மீது அதிக அழுத்தம் ஏதுமில்லை. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வென்றதை சாதனையாக கருதவில்லை. எங்கள் வீரர்களுக்கு இது பெரிய நம்பிக்கையை அளித்திருக்கும். இவ்வாறு பாபர் அசாம் கூறினார்.