சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் பட்டியல் இன அமைச்சர்களுக்கு முக்கிய இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் சமூகநீதி வார கொண்டாட்டம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ”பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு பொற்கால ஆட்சியில், இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக உலக தலைவர்கள் கூறுகின்றனர். மத்திய அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் மோடி செயல்படுகிறார்.
இதையும் படியுங்கள் : ராஜஸ்தான் ராயல்ஸ் போராடி தோல்வி – 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அசத்தல் வெற்றி!
தமிழ்நாட்டில் 11 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6000 வழங்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரம் கீழ்நோக்கி செல்லும் நிலையில், இந்தியா உலக அளவில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
சமூக நீதி என்றால் என்ன? சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் பட்டியலின அமைச்சர்களுக்கு முக்கிய இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பாஜக ஆட்சி நடத்தும் மாநிலங்களில் முதலமைச்சருக்கு அடுத்த முக்கிய துறைகள் பட்டியலின அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
திராவிட மாடல் ஆட்சியின் தோல்வி காரணமாகவே வேங்கை வயல் பிரச்னையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழகத்திற்கு திராவிட மாடல் ஆட்சி தேவையில்லை. பிரதமர் மோடியின் ஆன்மீக மாடல் ஆட்சியே தேவை” என்று தெரிவித்தார்.







