ரூ.500 கோடி இழப்பீடு தரமுடியாது என ஆர்.எஸ்.பாரதியின் நோட்டீசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 14ம் தேதி தனது கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச்சின் பில்லை வெளியிட்டார். அதோடு திமுகவின் முக்கிய தலைவர்களின் சொத்துப்பட்டியலையும் வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து DMK Files என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் மீது அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி. நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அதில், அண்ணாமலை தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில், வழக்கறிஞர் பால்கனராஜ் மூலம் பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்.எஸ்.பாரதியின் நோட்டீஸ்க்கு பதில் அளித்துள்ளார். அதில், திமுக குறித்த அண்ணாமலையின் கருத்து மற்றும் குற்றச்சாட்டு உண்மையே. யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் அவமானம் செய்வது செய்தியாளர் சந்திப்பில் நோக்கமில்லை.
ஆர்.எஸ்.பாரதி கேட்டபடி ரூ.500 கோடி இழப்பீடு தரமுடியாது. ரூ.500 கோடி இழப்பீடு தரும்படி சட்டத்திலும் இடம் இல்லை. திமுகவினர் சேர்த்துள்ள ஊழல்களை அடிப்படை ஆதாரங்களுடன் வெளிகொண்டு வந்திருக்கிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.








