“தமிழ்நாட்டுக்கு உதவுவதில் உறுதியாக உள்ளோம்” – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து உதவுவதில் உறுதியாக உள்ளோம் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் நேற்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திப்பதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வராவேற்பு அளிக்கப்பட்டது.இதனையடுத்து முதல்வர் விஜய் கிருஷ்ணா நதிக் கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள கனக துர்கை அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். பின்னர் முதலமைச்சர் விஜய் விஜயவாடாவில்ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தமிழ்நாடு-ஆந்திரா இடையிலான நீர் பங்கீடு, நதிகள் இணைப்பு குறித்தும் கிருஷ்ணா நீர் பங்கீடு, கோதாவரி-காவிரி இணைப்பு குறித்தும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் இரவு சென்னை வந்தடைந்தார்.

இந்தநிலையில் முதலமைச்சர் விஜய் உடனான சந்திப்பிற்கு பிறகு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “லட்சியத் திட்டமான கோதாவரி–காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் உள்ளிட்ட இரு மாநிலங்களுக்கும் பொதுவான முக்கியப் பிரச்சினைகள் குறித்து பயனுள்ள ஆலோசனைகளை மேற்கொண்டோம்

இந்த ஆண்டு இதுவரை சென்னைக்காக ஆந்திரப் பிரதேசம் 4.08 டிஎம்சி தண்ணீரை வழங்கியுள்ளது; எங்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை இருந்தபோதிலும், எங்கள் மக்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, அண்டை மாநிலமான தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து உதவுவதில் உறுதியாக உள்ளோம்

தண்ணீர் என்பது மோதலுக்கான காரணமாக இல்லாமல், ஒத்துழைப்புக்கான ஆதாரமாக இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்; மாநிலங்களுக்கு இடையிலான நெருங்கிய ஒருங்கிணைப்பும், மத்திய அரசின் ஆதரவும் இருந்தால், கோதாவரி–காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் தண்ணீர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.