பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராம்பூர் ஷியாம்சந்த் கிராமம் அருகே கங்கையில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். இந்தப் படகில் 20 முதல் 30 பயணிகள் வரை பயணித்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் உள்ளூர் கிராம மக்களின் உதவியுடன் நடைபெற்று வருகிறது.
இதுவரை படகு உரிமையாளர் உட்பட ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விபத்து குறித்து அம்மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “படகில் சுமார் 15 முதல் 20 பேர் இருந்தனர். அவர்களில், சுமார் 15 வயதுடைய 11 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். படகு உரிமையாளர் உட்பட ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர். நாங்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம், ” என்று
கூறியுள்ளார்.
இந்த நிலையில் பீகார் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடுள்ள எக்ஸ் தளப் பதிவில், “வைஷாலியில் உள்ள ராகோபூரில் நடந்த படகு விபத்தில் அப்பாவி உயிர்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சை உலுக்குகிறது. இந்த இக்கட்டான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாநில அரசு ரூ.4 லட்சம் கருணைத் தொகை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “பீகார் மாநிலம் வைஷாலியில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. இந்த இக்கட்டான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருகிறது. உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தேசிய மீட்பு நிதியிலிருந்து (PMNRF) தலா ரூ. 2 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.




