நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல்!

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டதால், நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கும், உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் முழுமையான தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்டாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீபாவளி பண்டிகையெட்டி பசுமை பட்டாசுகளை வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதித்து அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. அதன்படி, சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் நீரி அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை நவம்பர் 7ம் தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், நவம்பர் 8ம் தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் வெடிக்கலாம் என அனுமதித்ததோடு, நவம்பர் 4 முதல் 6ம் தேதி வரை அங்கீகரிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்யவும் அனுமதி அளித்தது.

அதேவேளையில், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட அமைதிப் பகுதிகளில் இருந்து 300 மீட்டர் சுற்றளவுக்குள் பட்டாசுகளை வெடிக்கவும், அங்கீகரிக்கப்படாத பட்டாசுகள், பேரியம் கலந்த பட்டாசுகள் மற்றும் சரவெடிகளை விற்பனை செய்யவும், ஆன்லைன் விற்பனைக்கும் தடைகள் விதிக்கப்பட்து. இந்தத் தற்காலிகத் தளர்வு நவம்பர் 8ம் தேதியுடன் முடிவடைவதுடன், நவம்பர் 9ம் தேதி முதல் பட்டாசுகளுக்கான முழுமையான தடை மீண்டும் அமலுக்கு வரும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பட்டாசு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ளாதாக கூறி பிரதான மனுதாரர் அர்ஜூன் கோபால் உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில்,” கடந்த 8ம் தேதி நாடு முழுவது தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது டெல்லி-என்சிஆர் மற்றும் நாடு முழுவதும் காற்றின் தரம் அபாயகரமான அளவிற்கு மோசமடைந்தது. இதற்கு பட்டாசுகளே முக்கியக் காரணம் ஆகும். அதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளது.

குறிப்பாக தலைநகர் டெல்லியை பொருத்தமட்டில் பட்டாசுகள் தயாரித்தல் மற்றும் விற்பனையை நிறுத்தி வைப்பது குறித்தும், பட்டாசுகளில் பேரியம் உப்புகள், லித்தியம், பாதரசம், ஆர்சனிக் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைப் பயன்படுத்துவதற்கும், சரவெடிகளை விற்பனை செய்வதற்கும் தடை விதிப்பது குறித்தும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் தற்போது மீறப்பட்டுள்ளது இதனை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது.

குறிப்பாக இதில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த காலக்கெடுவுக்குள் முன்னதாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் 02.11.2026 முதல் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவிலேயே இருந்து வந்ததுடன், தொடர்ந்து ஏழு நாட்களுக்கு காற்றின் தரம் 320க்கு மேல் இருந்தது மேலும், தீபாவளிக்கு முந்தைய நாள், காற்றின் தரக் குழு ஒன்று டெல்லியை உலகின் மிகவும் மாசுபட்ட முக்கிய நகரமாகத் தரவரிசைப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியது.

டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 1,500 முதல் 2,000 வரை உச்சத்தை அடைந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வின்படி, டெல்லியில் தீபாவளிக்கு பிந்தைய மாசுபாட்டில் 80சதவீதம் பட்டாசுகளால் ஏற்பட்டது என்பது உறுதியாகியது. குறிப்பாக தீபாவளிக்கு பின்னரும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன, டெல்லியை முழுவதும் அடர்த்தியான புகைமூட்டமும் சூழ்ந்து இருந்தது.

மேலும், அனுமதிக்கப்பட்ட விற்பனை நேரம் தொடங்குவதற்கு முன்பே தலைநகர் டெல்லியில் உள்ள கிடங்குகள் மற்றும் சந்தைகளில் தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு வெளிப்படையாக விற்கப்பட்டன.

இந்த விதிமீறல் என்பது தலைநகர் டெல்லி மட்டுமில்லாமல், நாடு முழுவதும் நடந்துள்ளது. எனவே இவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டு பட்டாசு விவகாரத்தில் கடந்த 29.10.2026 தேதியிட்ட உத்தரவை வேண்டுமென்றே மீறியதாக கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பட்டாசுகளின் உற்பத்தி, விநியோகம், விற்பனை, கொள்முதல் மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.