தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை குறைக்கக் கோரிய மனு – உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு!

தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை குறைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துள்ளது.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை குறைக்கக் கோரிய மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது பொருத்தமற்றது என தெரிவித்துள்ளது.

நல்ல சுரேஷ் ரெட்டி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசியல் சாசனத்தின் 84 மற்றும் 173ஆம் சரத்துகள், முறையே நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர் ஆவதற்கான குறைந்தபட்ச வயது வரம்புகளை நிர்ணயிக்கின்றன; அதன்படி, சட்டமன்ற உறுப்பினர், மக்களவை உறுப்பினர் ஆவதற்கு 25 வயதும், மாநில சட்டமேலவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவதற்கு 30 வயதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், 61வது அரசியலமைப்புத் திருத்தம் வாக்களிக்கும் வயதை 21-லிருந்து 18-ஆகக் குறைத்திருந்தது. தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச தகுதி வயதிலும் இதேபோன்ற வயது குறைப்பு செய்வதற்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது

அப்போது நீதிபதிகள், இந்த வயது வரம்புகளில் ஏதேனும் மாற்றம் செய்ய நாடாளுமன்றத்தின் அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படும், எனவே இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைப்பிடம் கோரிக்கை மனுவை அளிக்கலாம் என தெரிவித்தனர்.

அதற்கு மனுதாரர் தரப்பில், ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளதாகவும், இந்த மனுவானது, வாக்களிக்கும் வயதுக்கும் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதுக்கும் இடையே உள்ள வேறுபாடு குறித்த ஒரு முக்கியமான பிரச்சினையை எழுப்பியுள்ளதாக கூறினார்

ஆனால் அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது ஒரு பொருத்தமான மனு அல்ல,” என்று கூறினர்.
அதற்கு மனுதாரர் தரப்பு, நிலுவையில் உள்ள ஒரு கோரிக்கை மனு மீது முடிவெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கோரினார்.

ஆனால், அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரர் இது தொடர்பான கோரிக்கையுடன் உரிய அமைப்பிடம் கொடுத்துள்ள மனு மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்தனர்.

இதனையடுத்து மனுதாரர் தரப்பில் மனுவை வாபஸ் பெறுவதாக கூறியதை ஏற்று அனுமதி அளித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.