பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், வடமாநிலங்களில் பாஜக தங்களது நட்பு கட்சிகளின் ஆட்சியை எப்படி வீழ்த்தியது, எப்படி எதிர்த்தது என்று அனைவருக்கும் தெரியும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 54 ஆவது நினைவு தினைத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், “தேர்தல் ஆணையம் தொடக்கத்தில் சட்ட விதிகளை பின்பற்றாமல் கைவிட்டுவிட்டு, தற்போது நீதிமன்றத்தை கைகாட்டுவதை ஏற்றுகொள்ள முடியாது. சட்டத்தில் இருந்து தேர்தல் ஆணையம் விலகி உள்ளது. இருப்பினும் நீதிமன்றம் இதனை சரி செய்யும். திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் கூட எடப்பாடி பழனிச்சாமி ஒரு சிறந்த முதல்வராக இருந்தார் என ஏற்றுக்கொள்கின்றனர்.
அதிமுகவை ஒருங்கிணைத்து நடத்துவது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆவி தான். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு இரட்டை இல்லை சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் சொந்தம். இதனை மக்கள் ஏற்றுக்கொண்டனர். 94.5% பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர். எனவே இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் கிடைக்கும்.
பாஜக, வட இந்தியாவில் நட்பு கட்சிகளின் ஆட்சியை எப்படி எல்லாம் கவிழ்ந்தன. எப்படி எதிர்த்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். பாஜக விவகாரத்தில் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். மக்களுக்கு நன்றாக தெரியும். ஈரோடு கிழக்கு தேர்தலை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் போட்டியிடுவோம். மக்கள் எங்கள் பக்கம் தான் நிற்கிறார்கள். அதுபோல பாஜகவும் எங்கள் பக்கம் நிற்க விரும்பலாம். திமுக தவிர மற்ற எந்த கட்சிகள் வேண்டும் என்றாலும் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கலாம்.
ஓபிஎஸ் ஒரு செல்லா காசு. அவருக்கு எந்த ஒரு கட்சியும் இல்லை. யார் வேண்டும் என்றாலும் சுயேட்சை வேட்பாளரை நிறுத்தலாம். அவர் கட்சியை தொடங்கினால், அதற்கு சட்டப்பூர்வமாக ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.