சென்னை மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதிலும், எங்கேயும் தண்ணீர் தேங்கவில்லை என்று அவர்கள் கூறியதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை தடந்தர் நகர் பகுதியில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை பெருநகர மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, “சைதாப்பேட்டை, அண்ணா சாலை, ஜோன் சாலை வரை 200 மீட்டர் தொலைவிற்கு ஒரு கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டிலும், கிண்டியில் இரண்டு இடங்களில் மழைநீர், கழிவுநீர் செல்வதற்கான திட்டப்பணிகள் கட்டப்பட்டு முடிவடைந்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.2.85 கோடி செலவில் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடைய உள்ள நிலையில், எதிர்பாராத அளவு இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியனையும் என்னையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில், மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மழை நீரை அகற்றும்படி ஆணையிட்டுள்ளார் அதன் அடிப்படையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.
ஆனால் சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. சைதாப்பேட்டை பகுதியில், அடையாறில் இணைக்கும் கால்வாய் பணிகள் மழையால் முடிவடையாமல் உள்ளது. இருப்பினும் அந்தப் பகுதியில் இரவு நேரங்களில் பணி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தென்சென்னை பகுதியில் பல்வேறு பகுதிகளில் நேரடியாக செல்ல இருக்கிறோம். மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். எங்கேயும் தண்ணீர் தேங்கவில்லை என்று தகவல் தெரிவித்தனர்.
இந்த மழைநீர் வடிகால் திட்டங்கள் இந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் இல்லை. முன்பே இதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருந்தது. 6 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய், அரசாங்கத்திற்கு பெரும் பணம் மற்றும் கடன் சுமையை ஏற்படுத்தி சென்றுள்ளனர் முன்பு இருந்த ஆட்சியாளர்கள். இதற்கு முன்பு இருந்த அரசாங்கத்தின் மெத்தனப்போக்கு தான் இதற்கான காரணம்.
அமைச்சர் சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் நானும் இரவு பகல் பாராமல் 15 நாட்களாக
உழைத்து வருகிறோம். அந்த ஆட்சியின் தொய்வை நிறைவு செய்வதற்காக கடுமையாக
உழைத்து வருகிறோம். டெண்டர் ஆக்டிங்படி, அந்த பணிகள் ஒருவர் முடித்த பிறகு தான், மற்றொரு பணி கொடுக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். ஒருவருக்கு நான்கு பணிகள் கொடுக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம் இல்லை. சென்னையை பொருத்தவரை சாலை சீரமைப்பு பணி என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எங்கும் தொய்வு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.