தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.
அதேபோல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தொகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு காவல்துறை பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை, குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.







