நம்பிக்கை வாக்கெடுப்பு ; தவெக அரசு வெற்றி…!

தமிழ் நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற தவெக அரசு 144 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக காங்கிரஸ், விசிக , சிபிஐ , சிபிஎம் , ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவினால் பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து தவெக கட்சியின் தலைவர் விஜய் கடந்த 10 ஆம் தேதி தமிழ் நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து இன்று தமிழ் நாடு சட்டமன்றத்தில் தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் தனது ஆட்சி மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இந்த தீர்மானத்தை காங்கிரஸ், விசிக , சிபிஐ , சிபிஎம் , ஐயுஎம்எல், அதிமுக எஸ்.பி. வேலுமணி தரப்பு ஆகியோர் ஆதரித்தனர். திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து கருத்து தெரிவித்தனர்.

மேலும் திமுக எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.

இதனை தொடர்ந்து தவெக அரசின் நம்பிக்கை தீர்மானம் மீது சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் வாக்கெடுப்பை நடத்தினார்.

இதில் நம்பிக்கை தீர்மானத்தை ஆதரித்து 144 பேரும் எதிர்ப்பு தெரிவித்து 22 பேரும் வாக்களித்தனர். 5 எம்.எல்.ஏக்கள் நடுநிலை வகித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.