கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி கேன்டீனில் மீன் சாப்பாடு சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம் எதிரொலி கேன்டீனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தனியார் ஒருவர் நீண்ட காலமாக கேன்டீன் ஒன்றை நடத்தி வருகிறார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் இங்கு காலை முதல் இரவு வரை உணவு வகைகள் சாப்பாடு டிபன் போன்றவற்றை சாப்பிடுவது வழக்கம்.
இந்த உணவகத்தில் இரு தினங்களுக்கு முன்னர் நாகர்கோவில் பள்ளிவிளையை சார்ந்த யூஜின் தாஸ் (39) ,வெட்டூர்ணிமடம் பகுதியை சார்ந்த அஜீத் (26) ஒழுகினசேரியை சார்ந்த ஆனந்தராஜ் (31) மற்றும் கடியப்பட்டணத்தை சார்ந்த பனிய டிமை (41) ஆதிய 4 பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களை பார்ப்பதற்காக வந்த போது இந்த கேன்டீனில் மீன் சாப்பாடு சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக இந்த நான்கு பேருக்கும் திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 4 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் உணவகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். மாநகராட்சி அதிகாரிகளும் சோதனை நடத்தினார்கள். அவர்கள் நடத்திய சோதனையில் உணவகத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகள் தரமான முறையில் இல்லை என்றும் சுகாதாரமற்ற சூழ்நிலை இருந்துள்ளது எனவும் தெரியவந்தது. இதனை அடுத்து இன்று அந்த உணவகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.







