மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 4 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். இவர் இன்று பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்து பேசினார். ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்ட மாநிலம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் மம்தா பானர்ஜி விவாதித்தாக பிரதமர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவையும் சந்திக்க உள்ளார். மேலும் நாளை மறுநாள் பிரதமர் தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள உள்ளார். கடந்த ஆண்டு அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/PMOIndia/status/1555520562251804673
நாளை குடியரசு துணை தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மம்தா பானர்ஜியின் சந்திப்புகள் முக்கியத்துவம் பெற்றதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கர் துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டுள்ளார்.







