கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பு மீண்டும் ஒரு லட்சம் கன அடியை தாண்டியுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தின் முக்கிய அணைகளான கபிணி, கே.ஆர்.எஸ் முழுக்கொள்ளவை எட்டியுள்ளன. கே.ஆர்.எஸ் அணை அழைக்கப்படும் கிருஷ்ண ராஜ சாகர் அணையில் தற்போது 123.74 அடியாக நீர் இருப்பு உள்ளது. அந்த அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 68,887 கன அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 78,274 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதே போல் மற்றொரு முக்கிய அணையான கபிணி அணையில் தற்போது 83.41 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 24,946 கன அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 25,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கே.ஆர்.எஸ், கபிணி ஆகிய இரண்டு அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றம் இன்று காலை விநாடிக்கு 94,963 கன அடியாக இருந்த நிலையில் தற்போது உபரிநீர் திறப்பு 1, 03, 274 கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர் வரத்தும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து காவிரி கரையோரப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.







