கஞ்சா பூ கண்ணாலே பாடலை எழுதிய கவிஞர் கருமாத்தூர் மணிமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
கார்த்தி – அதிதி நடிப்பில் தற்போது திரையில் வெளியாகிய விருமன் திரைப்பட பாடல் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போதைய இளம் தலைமுறையினருக்கு பழங்கால பொருட்களின் பெயர்களை தெரிய வைப்பதற்காகவே விருமன் படத்தில் ‘கஞ்சா பூ கண்ணாலே’ என்ற பாடலை எழுதியதாக கவிஞர் கருமாத்தூர் மணிமாறன் தெரிவித்துள்ளார். இன்று நாகர்கோவிலில் விருமன் திரைப்படம் வெளியிடப்பட்ட திரையரங்கிற்கு வந்து திரைப்படத்தை பார்த்த கவிஞர் கருமாத்தூர் மணிமாறன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: நடிகர் கார்த்தி அதிதி நடித்த விருமன் படம் இன்று திரையிடப்பட்டது. இந்த படத்தில் தனக்கு பாடல் எழுதுவதற்காக இயக்குனர் முத்தையா வாய்ப்பளித்தார். அதற்காக இயக்குனருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திரையரங்கில்’ கஞ்சா பூ கண்ணாலே’ இந்த பாடலை இளைஞர்கள் கைதட்டி ஆரவாரத்துடன் ரசித்த காட்சி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த பாடல் பழங்கால பொருட்களின் பெயர்களை, பழங்கால சொற்களை வருங்கால சந்ததியினர் மற்றும் இளைஞர்களுக்கு நினைவுபடுத்தும் விதத்தில் புகுத்தி உள்ளதாக தெரிவித்த மணீமாறன்,
“தற்போதைய காலகட்டத்தில் கிராமத்தில் இளைஞர்களுக்கு கூட பழங்கால பொருட்கள் குறித்து விவரம் தெரியவில்லை. இனி வருங்காலங்களில் அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் பழங்கால சொற்றொடர்கள் தமிழ் வரிகள் போன்றவற்றை எனது பாடல்களில் புகுத்த உள்ளேன்” அவர் கூறினார்.
– பவானி பால்பாண்டி







