தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கடந்த 26.8.2026 அன்று, நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிக்கியதைத் தொடர்ந்து, அவர்களை விரைந்து மீட்க தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுடனும் நேபாள அரசுடனும் இணைந்து பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன்படி, சென்னையில் அயலகத் தமிழர் நலத்துறை ஆணையரகத்திலும் புதுதில்லி தமிழ்நாடு இல்லத்திலும் உதவி மையம் / அவசரக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.
பேர் 2.9.2026 நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 305 பேரில் 220 பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர், மீதமுள்ள 85 நபர்களைத் தொடர்புகொள்ள தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு, நேபாள அரசு மற்றும் இந்தியத் தூதரகத்துடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து, நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக தமிழ்நாடு அரசால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, இப்பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக, நேபாள அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, காணாமல் போனவர்களின் முதல்நிலை உறவினர்களில் (First Degree Relatives) விருப்பமுள்ளவர்கள் DNA பரிசோதனை செய்வதற்கு, தமிழ்நாடு அரசால் சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மண்டலங்களிலுள்ள தடய அறிவியல் ஆய்வகங்களின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களின் முதல்நிலை உறவினர்களான தாய் (அல்லது) தந்தை (அல்லது) மகன் (அல்லது) மகள் கட்டணமின்றி இச்சோதனை எடுத்துக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
DNA பரிசோதனை மண்டலங்கள் பின்வருமாறு:
சென்னை
திரு. காஜா மொய்தீன், இயக்குநர், தடய அறிவியல் துறை, 30A, காமராஜர் சாலை, மயிலாப்பூர், சென்னை 600 004. கைபேசி எண் 9941464808.
மதுரை
திரு. விஜயேந்திரன், துணை இயக்குநர், தடய அறிவியல் ஆய்வகம், கலெக்டர் சாலை, மதுரை மருத்துவக் கல்லூரி வளாகம், மதுரை 625 020. கைபேசி எண் 8637674451.
தஞ்சாவூர்
திரு.ராஜ்மோகன், துணை இயக்குநர், மண்டல தடய அறிவியல் ஆய்வகம், பிள்ளையார்பட்டி, வல்லம் மெயின் ரோடு, தஞ்சாவூர் -613403.
கைபேசி எண் 9791112894.
நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களில் விருப்பமுள்ள முதல்நிலை உறவினர்களை அவர்களுக்கு அருகாமையில் உள்ள மண்டலங்களான சென்னை, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய ஏதாவதொரு மண்டலத்திற்கு அழைத்துச்சென்று கட்டணமின்றி DNA பரிசோதனை (இரத்த மாதிரி) எடுப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவும், அதனை நேபாள அரசின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவ்விவரங்களுடன் நேபாளத்திற்குச் செல்ல விரும்பும் உறவினர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
இயக்குநர்,
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், சேப்பாக்கம், சென்னை 600 005.
24 X 7 உதவி எண்கள்:
18003093793 / 8069009901 / 8069009900
தமிழ்நாடு இல்லம், புதுதில்லி:
கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்:
9289516712 (Whatsapp / Call)
9868530776 (Mobile No.). இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




