மது வாங்குவோரின் வயது சரிபார்ப்பை கட்டாயமாக்க கோரிய வழக்கு – வழக்கறிஞர் ஆஜராகாததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

மதுபானக் கடைகளில் மது வாங்குவோரின் வயதை கட்டாயமாகச் சரிபார்க்கும் நடைமுறையை நாடு முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கில், மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

‘குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான சமூகம்’ என்ற அமைப்பு தாக்கல் செய்துள்ள இந்தப் பொதுநல மனுவில், மதுபானக் கடைகள், பார்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் ரெஸ்டோ-பார்களில் மது வாங்குவோரின் வயதைச் சரிபார்க்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறையை உருவாக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டப்பூர்வமாக மது வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது மாறுபடுவதால், வயதைச் சரிபார்க்க ஒரே நடைமுறை தேவை என வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் விக்ரம் நாத், ஆர்.மகாதேவன், அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், ஆர். மகாதேவன், அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வழக்கறிஞர் யாரும் விசாரணைக்கு ஆஜராகாததை கண்ட நீதிபதிகள், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லையா? என அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதையடுத்து 4 வார காலத்திற்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள், அடுத்த விசாரணையின் போது மத்திய அரசின் செலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.