விருதுநகர் மாவட்டம் அத்திகோயில் பகுதியிலுள்ள மலைப்பகுதியிலிருந்து அடிவாரத்தை நோக்கி இரைத் தேடி வந்த யானை ஒன்று அப்பகுதியிலிருந்த பள்ளத்தில் எதிர்பாரதவிதமாக விழுந்து உயிரிழந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வனப்பகுதியில் புலிகள் மட்டுமின்றி யானை,மான்,குரங்கு,மிளா உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் வன விலங்குகள் அவ்வப்போது இரை மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.
அவ்வாறு ஊருக்குள் வரும் விலங்குகள் பல காரணங்களினால் பலியாகின்றன. அத்திகோயில் மலைவாழ் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் 5 அடி ஆழத்தில் பள்ளமொன்று உள்ளது.
இந்நிலையில் துரதிஷ்டவசமாக மலையில் இருந்து அடிவாரத்தை நோக்கி இரைத் தேடி வந்த யானை ஒன்று அப்பகுதியில் இருந்த மரத்தின் கிளையை பறித்து சாப்பிட முயன்றபோது எதிர்பாரதவிதமாக அப்பள்ளத்தில் குப்புற கவிழ்ந்து விழுந்து திரும்ப எழ முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தது.
இதனைகண்ட மலைவாழ் மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் யானை உடலை மீட்டு உடற்கூராய்வு செய்து அப் பகுதியில் புதைத்தனர்.
—-வேந்தன்







