#JrNTRன் திரைப்படத்தை பார்த்தவாறு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் – இணையத்தில் வைரல்!

ஜூனியர் என்.டி.ஆரின் படத்தை பார்த்தவாறு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏ.கொத்தப்பள்ளியைச் சேர்ந்தவர் அனந்தலட்சுமி. 55 வயதான இவர் கை, கால்களில்…

ஜூனியர் என்.டி.ஆரின் படத்தை பார்த்தவாறு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏ.கொத்தப்பள்ளியைச் சேர்ந்தவர் அனந்தலட்சுமி. 55 வயதான இவர் கை, கால்களில் உணர்ச்சியின்மை, தலைவலி போன்ற பிரச்னைகளால் அவதிபட்டு வந்திருக்கிறார். மருத்துவமனையில் சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்தது.

தனியார் மருத்துவமனை செல்ல வசதியில்லாத காரணத்தினால் அவர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார். அதன்படி, காக்கிநாடா அரசு மருத்துவமனையை நாடினார். அங்கு அவருக்கு விழிப்பு நிலை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதாவது, நோயாளி விழித்திருக்கும்போது அறுவை சிகிச்சை செய்யப்படுவதுதான் விழிப்பு நிலை அறுவை சிகிச்சை.

மூளையில் அறுவை சிகிச்சை செய்யும்போது நரம்பியல் செயற்பாடுகள் செயலிழக்காமல் இருக்கவும் மேலும் கட்டியை முழுவதுமாக நீக்கவும் இந்த சிகிச்சை முறை அதிக பயனுள்ளதாக இருப்பதாக கருதப்படுகிறது. அதன்படி, அறுவை சிகிச்சையின்போது அவர் விழித்துக்கொண்டு இருப்பதற்காக மருத்துவர்கள் அவருக்கு பிடித்த படமான ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ‘அதுர்ஸ்’ படத்தினை அவருக்கு போட்டுக்காட்டியுள்ளனர்.

இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும் அடுத்த 5  நாட்களில் அந்த பெண் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.