மரணிக்க இருப்பதால் ஒரு நாள் விடுப்பு வேண்டும் – காவல் உதவி ஆய்வாளர் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தலைமறைவு

விழுப்புரம் ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் மகிபால், தான் மரணிக்க  இருப்பதால் தனக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் எனவும் தன் இறப்பிற்குத் தனிப்பிரிவு ஆய்வாளர் தங்க குருநாதன் தான் காரணம் என்றும்…

விழுப்புரம் ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் மகிபால், தான் மரணிக்க  இருப்பதால் தனக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் எனவும் தன் இறப்பிற்குத் தனிப்பிரிவு ஆய்வாளர் தங்க குருநாதன் தான் காரணம் என்றும் குறுஞ்செய்தியைப் போலீசார் வாட்சப் குழுவில் அனுப்பிவிட்டு, தலைமறைவாகிய சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படையில் காவல் உதவி ஆய்வாளராக மகிபால் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன் கப்பியாம்புலியூரில், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக லாரியில் கொண்டு வரப்படும் கம்பிகள் மற்றும் மணல் திருட்டுச் சம்பவம் தொடர்பான குற்றவாளிகளைப் பிடித்த போது, அவர்கள் மீது வழக்கு பதியாமல் தனிப்பிரிவு ஆய்வாளர் தங்க குருநாதன் விட சொன்னதாக கூறி வழக்கு பதிவு செய்யாமல் விட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக எஸ்.பி ஸ்ரீநாதாவை நேரில் சந்திக்க வேண்டுமென்று கூறியபோது அவரைப் பார்க்கவிடாமல் தனிப்பிரிவு ஆய்வாளர் தடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் உதவி ஆய்வாளர் செய்த தவறுக்குத், தன்னை ஆயுதப்படைக்கு மாற்றிவிட்டார்கள். மேலும், பணி ஓய்வு பெறுவதற்கு ஆறுமாத காலமே உள்ள நிலையில், தனக்கு அதிக வேலை பளுவை அளித்து வருகிறார்கள், விடுமுறை அளிக்காமல் பணி செய்ய வலியுறுத்துகிறார்கள். இதனால், தான் இன்று இறந்தால் என் இறப்பிற்கு காவல் ஆய்வாளர் தங்க குருநாதன் தான் காரணம் மற்றும் இன்று இறக்க தனக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டுமென வாட்சப்பில்,எஸ்.பி, தங்க குருநாதன் மற்றும் போலீசார் இருக்கும் குழுவில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு உதவி ஆய்வாளரான மகிபால் தலைமறைவாகியுள்ளார்.
உதவி ஆய்வாளரின் இந்த குறுஞ்செய்தி போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரனை செய்து, தலைமறைவாகியுள்ள காவலரைத் தேடிவருகின்றனர்.
-சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.