விழுப்புரத்தில் பள்ளி மாணவனை சாதி பெயரை கூறி அழைத்து தீயில் தள்ளிய கொடூரம் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை அருகிலுள்ள காட்டுச்சிவிரி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் சுந்தர்ராஜ் (11). அதே ஊரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் மாணவன் சுந்தர்ராஜ் தன்னுடைய வீட்டில் இருந்து அருகிலுள்ள பாட்டி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மற்றொரு சமூகத்தை சேர்ந்த பாலமுருகன், திவாகர், கிஷோர் ஆகிய மூன்று பேர் சுந்தர்ராஜை சாதிப் பெயரை கூறி அழைத்துள்ளனர்.
அருகில் சென்ற சுந்தர்ராஜை திடீரென எரிந்துகொண்டிருந்த தீயில் தள்ளியுள்ளனர். இதில், சுந்தர் ராஜின் சட்டை தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. அப்போது அருகிலுள்ள தண்ணீர் தொட்டியில் உடலை நனைத்துள்ளார் சுந்தர்ராஜ். இதில் மார்பு, முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது. சுந்தர்ராஜ் தற்போது திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சுந்தர் ராஜ் தந்தை கன்னியப்பன் வெள்ளிமேடுபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவன் சுந்தர்ராஜ் கூறுகையில், “நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பாலமுருகன், திவாகர், கிஷோர் ஆகிய மூவரும் என்னை சாதி பெயர் கூறி அழைத்தனர். அருகில் சென்றவுடன் தீயில் தள்ளிவிட்டனர். மேலும், பள்ளிக்கூடத்தில் என்னை சாதி பெயரை கூறி அழைக்கிறார்கள், அடிக்கிறார்கள்” என்றார்.
மாணவனின் வாக்குமூலத்தின் மூலம் பள்ளியிலும் மாணவன் சாதி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாணவர்கள் மத்தியில் சாதி உணர்வு மேலோங்கி வருவது கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Advertisement: