செய்திகள்

சென்னை ஆர்.ஏ.புரம் வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை ஆர்.ஏ.புரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்ற தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், தடைகோரிய இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் அரசு நிலங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றை அகற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.ஏ.புரம் பகுதி மக்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சால்வேஸ், சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது மாநில முதல்வர் மாற்று இடம் வழங்குவதாக கூறியுள்ளார். ஆனால் அந்த இடம் தற்போது வசித்து வரும் பகுதியில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால், இந்த மக்களின் அன்றாட வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் தற்போது இந்த மக்களுக்கு உடனடி மாற்று இடமோ, அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை என கூறினார்

தமிழக அரசு தரப்பு: ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவையே செயல்படுத்தி வருகிறோம். அதேவேளையில் இந்த மக்களுக்காக மாற்று இடம் பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரி ஆகிய 3 பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பகுதியில் வசித்த பலர் காலி செய்ய வேண்டும் என்ற நோட்டீஸை பெற்று காலி செய்துவிட்டனர். ஆனால் தற்போது இருப்பவர்கள் காலி செய்ய மறுக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள்: இந்த விவகாரத்தில் 2011 முதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதை மாநில அரசு செயல்படுத்த வேண்டும். சம்மந்தப்பட்ட நபர்களுக்கு மாற்று இடம் வழங்குவது அரசின் வேலை. அதை அவர்கள் செய்யட்டும். இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் நாங்கள் தடை விதிக்கப் போவதில்லை என்றனர்.

மனுதாரர் தரப்பு: இப்பகுதியில் உள்ள மக்களுக்கு மாற்று இடம் இதுவரை வழங்கப்பட வில்லை, இது நியாயம் இல்லை மேலும் இத்தனை காலம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவசரப்படுத்துகின்றனர். மின்சாரம், தண்ணீர் உள்ளிட்டவைகளையும் நிறுத்திவிட்டனர் என கூறினார்.

நீதிபதிகள்: தற்காலிகமாக மாற்று இடம் வழங்க அரசுக்கு அறிவுறுத்தல் வழங்குகிறோம்.ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றும் விசயங்களில் நீதிமன்ற உத்தரவு கடைபிடிக்கப்பட வேண்டும். மேலும் தற்போது முதலமைச்சர் சட்டப் பேரவையில் மாற்று இடம் தொடர்பாக அறிவிப்பை கொடுத்துள்ளார் என கூறுகின்றீர்கள். அது சாதாரண விசயம் கிடையாது. முதல்வர் இந்த விவகாரத்தில் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறார் எனத் தெரிகிறது.

எனவே ஆர்.ஏ.புரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்ற இடைக்கால மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம். அதேவேளையில் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்று தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான விசாரணை ஜூலை 12க்கு ஒத்திவைக்கிறோம்.

அன்றைய தினம் ஆக்கிரமிப்பு அகற்றம், மாற்று இடம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement:
SHARE

Related posts

“தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கை நாட்டை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும்” – பிரதமர் மோடி

Saravana Kumar

சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் டிஜிபி சுணக்கம் காட்டக் கூடாது – ஸ்டாலின்!

Gayathri Venkatesan

மெகபூப முப்தி பாஸ்போர்ட் நிராகரிப்பு!

எல்.ரேணுகாதேவி