காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல தலைவர் பாலச்சந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அசானி புயல் காக்கிநாடாவிற்கு தென்கிழக்கே சுமார் 260 கிலோ மீட்டர் தொலைவிலும், முசிலி பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக கூறினார்.
மேலும், அசானி புயல் கடந்த 6 மணி நேரத்தில் 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளதாகவும், இந்த புயல் தொடர்ந்து வட கிழக்கு திசையில் நகர்ந்து இன்று இரவு ஆந்திர கடற்கரைக்கு மிக அருகில் சென்று பின்னர் வட கிழக்கு திசையில் நகர்ந்து செல்லும். இதன் காரணமாக, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும்
திருப்பத்தூர் மாவட்டம் வட புதுப்பட்டில் 5 செமீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பொழியும். இன்றும் நாளையும் மத்திய மேற்கு வங்க கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் 11 மற்றும் 12 தேதிகளில் வட மேற்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
மழைப் பொழிவு காரணமாக பல இடங்களில் இயல்பை விட வெப்பம் குறைந்து இருப்பதாகவும் அதிகபட்சமாக திருத்தணியில் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் குறைந்து இருப்பதாக தெரிவித்தார். மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் வெப்பம் குறைந்து காணப்படும் எனவும் தெரிவித்தார்.








