விழுப்புரம் அருகே பாலியல் புகாரில் தந்தையை கைது செய்தபோது, போலீசார் மகனையும் கைது செய்து சென்ற நிலையில், விசாரணைக்கு பயந்து மகன் தப்பி ஓடி உயிரை மாய்த்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சூரப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 36). கூலி வேலை செய்து வரும் வெங்கடேசனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், வெங்கடேசனின் தந்தையான சம்பத் (65) பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, இன்று அதிகாலை 4 மணி அளவில் சம்பத் வீட்டிற்கு சென்ற செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி தலைமையிலான 5 பேர் கொண்ட போலீசார், சம்பத்தை கைது செய்த நிலையில் அங்கிருந்த அவருடைய மகன் வெங்கடேசனையும் வலுக்கட்டாயமாக அடித்து இழுத்து போலீஸ் ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர்.
இதனிடையே, வெங்கடேசன் பாதி வழியில் போலீஸ் ஜிப்பில் இருந்து தப்பித்து ஓடிவிட்டதாக தெரிகிறது. ஆனால் இது குறித்து போலீசார் வெங்கடேசன் குடும்பத்தினருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் வெங்கடேசன் போலீஸ் விசாரணைக்கு பயந்தும் அவமானம் தாங்க முடியாமலும் வயல்வெளியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டார்.
விசாரணைக்கு பயந்து இளைஞர் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சூரப்பன்தாங்கல் தாங்கல் கிராமத்தில் பதட்டமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்