ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே 56 கிராமங்களை சேர்ந்த மக்கள்
குலதெய்வ வழிபாட்டிற்காக பாரம்பரியத்தை போற்றும் வகையில்,
மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உறவுகள் மேம்படவும் மற்றும் பாரம்பரியம்
காக்கவும், மாட்டு வண்டியில் சென்று குலதெய்வ வழிபாடு செய்வதை கிராமத்தினர்
வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், அகத்தாரிருப்பு மற்றும் சுற்றுப்பகுதியைச்
சேர்ந்த 56 கிராம மக்களும் தங்களது குடும்பத்தினருடன் குலதெய்வ வழிபாட்டிற்கு,
15 நாள் பயணமாக 215 மாட்டு வண்டிகளில் 6 ஆண்டுகளுக்கு பின் இன்று அதிகாலையில்
பயணத்தை துவங்கினர்.
முன்னதாக, அகத்தாரிருப்பு தாய் கிராமத்திற்கு நேற்று இரவு குடும்பத்தினருடன் 56
கிராம மக்களும் வந்து தங்கினர். அனைவரும் ஒருங்கிணைந்து அதிகாலை 4 மணிக்கு
தங்களது 300 ஆண்டுகால பாரம்பரியத்தை போற்றும் பயணத்தை மேற்கொண்டனர்.
மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை விருதுநகர் மாவட்டம் கூட முடையார் அய்யனார்
கோயிலுக்கு செல்வர்.
மேலும், ராஜபாளையம் இருளப்ப சுவாமி கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் காளியம்மன்
கோயில் ஆகிய இடங்களுக்கு, குடும்பத்தினருடன் மாட்டு வண்டியில் சென்று குலதெய்வத்தை வழிபட்டு வருவர். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த இருமுறை வழிபட செல்ல முடியாத நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று மீண்டும் சென்றனர். மேலும் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி மற்றும் பரமக்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து 56 கிராம மக்கள் ஒன்றிணைந்து சென்றனர்.
தொடர்ந்து, மூன்று நாட்கள் தங்களது சொந்த பந்தங்களுடன் பக்தி பயணம் மேற்கொள்ளும் கிராமத்தினர், ரோட்டோரங்களில் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். பாரம்பரியமாக கொண்டாடும் இந்த விழாவால் வெளியூர்களில் வசிக்கும் குழந்தைகள் கிராமப் பண்பாட்டை அறியவும், முகம் தெரியாத உறவினர்களை தெரிந்து கொள்ளவும் உதவியாக அமையும் என தெரிவித்து வருகின்றனர்.
கு. பாலமுருகன்







