அதிநவீன ஆம்புலன்ஸை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்!

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஒரே வாரத்தில் தனது சொந்த செலவில் ரூ 18 லட்சம் மதிப்பில் அதிநவீன இலவச ஆம்புலன்ஸ் ஊர்தியை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர். கள்ளக்குறிச்சி,…

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஒரே வாரத்தில் தனது சொந்த செலவில் ரூ 18 லட்சம் மதிப்பில் அதிநவீன இலவச ஆம்புலன்ஸ் ஊர்தியை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் அருகே உள்ளது லக்கிநாயக்கண்பட்டி கிராமம்.
கடந்த 2021 ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஷீலா ராஜேந்திரன்.

இந்த கிராமத்தில் வாழும் பொதுமக்கள் அனைவருமே விவசாயம் சார்ந்த தொழில்களையே பெரும்பாலும் செய்து வருவதாலும் பொதுமக்களுக்கு திடீரென பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் கடித்தாலோ அல்லது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, மேலும் பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டாலோ 50 கிமீக்கு அப்பால் உள்ள கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு விரைந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தங்களுக்கு  இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்து தர வேண்டும் என கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு கிராம பொது மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா ராஜேந்திரனிடம் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா ராஜேந்திரன் தன்னுடைய சொந்த செலவில் ரூ18 லட்ச ரூபாய் மதிப்பில் அதிநவீன இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை பொது மக்கள் மருத்துவ பயன்பாட்டிற்காக வழங்கினார். இந்த அவசர ஊர்தியில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களில் உள்ள அவசர ஊர்தி போல் சிறப்பம்சங்களும் உள்ளது எனவும், இந்த ஆம்புலன்சில் ஆக்சிஜன் நிரப்பி இரண்டு வெண்டிலேட்டர்கள், இசிஜி கருவிகள், சுவாசக் கருவிகள் மற்றும் நாடித்துடிப்பை
கண்டறியும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் லக்கி நாயக்கன்பட்டி ஊராட்சி மட்டுமல்லாமல் அந்த ஊராட்சியின் அருகே உள்ள
பத்துக்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் இலவசமாக பயன்படுத்திக்
கொள்ளலாம் என ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். கிராம மக்களுக்கு இலவசமாக அர்ப்பணித்த ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா ராஜேந்திரனை அக்கிராம பொது மக்கள் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.