அகதிகள் முகாமில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

குளித்தலை அருகே இரும்பூதிபட்டி அகதிகள் முகாமில் உள்ள திருமணமான பெண்ணை பட்ட பகலில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜ் கைது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டி பகுதியில்…

குளித்தலை அருகே இரும்பூதிபட்டி அகதிகள் முகாமில் உள்ள திருமணமான பெண்ணை பட்ட பகலில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜ் கைது.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டி பகுதியில் அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகக் கணவன் மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் பாதிக்கப்பட்ட பெண் வசித்து வருகிறார்.

அப்பெண் வசித்து வரும் வீட்டிற்கு அரவக்குறிச்சி வெஞ்சமாம் கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவாயம் வடக்கு கிராம நிர்வாக அலுவலரான அன்புராஜ் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். அப்போது அப்பெண் சத்தம் போட்டதால், அந்த பெண்ணை மிரட்டி தகவலை வெளியில் கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.

பின் பாதிக்கப்பட்ட அப்பெண் தகவலை அருகில் உள்ளவர்களிடம்  சம்பவம் குறித்துக் கூறியுள்ளார். அனைவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மீது புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி, வீட்டிலிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டதாகவும், வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகக் கிராம நிர்வாக அலுவலர் மீது வழக்குப் பதிவு செய்தார். பின் அன்புராஜ் கைது செய்யப்பட்டுக் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.