உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்-க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் கடந்த 2017-ம் ஆண்டு கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து வெளியேறினார். இதையடுத்து, தனது மகன் அகிலேஷ் யாதவ் அந்த சமாஜ் வாதி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், முலாயம் சிங் யாதவ்-க்கு இன்று திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உடனே அவரை அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் அனுமதித்துள்ளனர். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த சூழலில், ஐ.சி.யூ.வில் அவரை சேர்த்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எனினும், கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் யாரும் மருத்துவமனைக்கு வெளியே வந்து குவிந்து விடவேண்டாம் என்றும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அவர் முழு அளவில் குணமடைந்த பின்னர் அவரை சந்திக்கலாம் என்றும் கட்சி அறிவித்துள்ளது. மேலும் தந்தை மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும், அகிலேஷ் யாதவ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் தேர்தல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் 3-வது முறையாக அகிலேஷ் யாதவ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-இரா.நம்பிராஜன்