முக்கியச் செய்திகள் சினிமா

ஷூட்டிங் முடிஞ்சிருச்சின்ற தைரியத்துல கேள்வி கேக்குறீங்களா? விஜய்

நடிகர் விஜய் திரைப்படங்கள் என்றாலே அதற்கான அறிவிப்பு தொடங்கி ஃபர்ஸ்ட் லுக், டீஸர், ட்ரெயிலர் என ஒவ்வொரு வெளியீடுகளுக்கும் இணையம் முழுவதும் கலைகட்டுவது வாடிக்கை. மேலும், படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளுமே திரைப்பட வெளியீடுபோல பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் நடைபெறும்.
கடந்தகாலங்களில் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது, ‘அமைதியோ அமைதி.. அமைதிக்கெல்லாம் அமைதி!’ என்ற தொனியில் வலம்வந்துகொண்டிருந்த விஜய் கடந்த 5 படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களிலும் வேறு அவதாரங்களை எடுக்கத்தொடங்கினார். குட்டி ஸ்டோரி சொல்லுவது, அடுக்கு மொழியில் எதுகை மோனையுடன் சக கலைஞர்களை புகழ்வது, ‘நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்!’ என செல்லமாக பாடி ரசிகர்களை வசீகரிப்பது, அனிருத்தை அழைத்து அருகில் செட் பிராப்பர்டியாக வைத்துக்கொண்டு ரகளையாக நடனமாடுவது, பேசும்போது மழைச்சாரல் போல் ஆங்காங்கே அரசியல் கருத்துக்களை தூவுவது என ஒரு புதிய ட்ரெண்டையே உருவாக்கினார் விஜய்.


இதனைத்தொடர்ந்து விஜயின் ஒவ்வொரு படங்களுக்கும் இருக்கும் அதே எதிர்பார்ப்பு ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கும் உருவாகத்தொடங்கின. ஒவ்வொரு ஆடியோ வெளியிட்டிலும் ஒரு வித்தியாசமான அவதாரம் எடுக்கும் விஜய், அடுத்து வெளியாகக்கூடிய பீஸ்ட் திரைப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழாவில் எந்தமாதிரியான அவதாரம் எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. தேர்தலுக்கு வாக்களிக்க சைக்கிளில் சென்றது, புதிய ஆட்சி, உக்ரைன் போர், விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பீஸ்ட் ஆடியோ வெளியிட்டு விழாவில் விஜய், நேரடியாகவோ சூசகமாகவே கருத்துக்கள் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. முந்தைய படங்களின் பாடல் வெளியீட்டு விழாவில் பாட்டு, நடனம் என ரசிகர்களுக்கு விருந்து வைத்த விஜய், பீஸ்ட் வெளியீட்டு விழாவில் அடுத்தகட்டமாக ஸ்டண்ட் காட்சிகளைக்கூட மேடையிலேயே அரங்கேற்றி காட்டக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா நடத்தப்படமாட்டாது என்ற தகவல் விஜயின் ‘நெஞ்சில் குடியிருக்கும்’ ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முந்தைய வெளியீட்டு விழாக்களுக்கு வந்த சில ரசிகர்கள் காவலர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானபோதிலும் மனம்தளராமல் பீஸ்ட் ஆடியோ ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக ஆவலாக காத்துக்கொண்டிருந்தனர்.
இந்நிலை விஜய் ரசிகர்களின் வருத்தத்தை போக்கும் வகையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜயுடன் சிறப்பு நேர்காணல் நடத்தப்படும் என்ற தகவல் வெளியானது. பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடல் எழுதிய சிவகார்த்திகேயன் விஜயுடனான இந்த சிறப்பு நேர்காணலை நடத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் இயக்குநர் நெல்சனே விஜயை நேர்காணல் செய்வார் என்ற அறிவிப்பு விஜய் ரசிகர்களை மேலும் உற்சாகமடைய செய்தது. ஏனென்றால், கடந்த ஒரு ஆண்டாக இயக்குநர் நெல்சன் கலந்துகொண்ட அனைத்து பேட்டிகளுமே இணையத்தில் ட்ரெண்ட். எந்த கேள்வியானாலும் நகைச்சுவையாக எதிர்கொண்டு மிகச்சுலபாக அனைவரையும் ரசிக்கவைத்துவிடுவதே அவரின் ஸ்பெஷல்!இந்நிலையில் விஜயுடன் நெல்சன் நடத்திய நேர்காணலுக்கான ப்ரோமோ ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. ப்ரோமோவின் ஆரம்பத்தில் இருவருமே விக்ரம் – வேதா தொனியில் முறைத்துக்கொண்டிருக்க சட்டென ஜாலியோ ஜிம்கானாவின் பின்னணி இசை ஒலிக்க இருவருமே fun mode-க்கு மாறுகிறார்கள். ‘எதாவது குட்டி ஸ்டோரி சொல்லுங்களேன்’ என நெல்சன் கேக்க, ‘இப்போ ஏதும் ஸ்டாக் இல்லையே’ என விஜய் பதிலளிக்கிறார். ‘ பாக்கெட்ல இருக்கும் நல்லா தேடிபாருங்க’ என சட்டென நெல்சன் கவுண்டர் கொடுக்க, அவரை செல்லமாக கையை தூக்கி அதட்டுகிறார் விஜய். மேலும், ‘ஷூட்டிங் முடிஞ்சிருச்சின்ற தைரியத்துல இஷ்டத்துக்கும் you are asking this kind of questionsஆ?’ என தனக்கே உரிய பாணியில் நெல்சனுக்கு ஜாலியாக கவுண்டரும் கொடுக்கிறார் விஜய். ஹூட்டிங் முன்னாடியே இண்டர்வியூ பன்னசொன்னாங்க நான் தான் முடியாதுன்னுட்டேன்னு ஜாலியாக போட்டும் கொடுத்தார் நெல்சன். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து இன்று இன்னொரு ப்ரொமோ வெளியானது. விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுமே ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த மிக முக்கியமான ஒரு கேள்வியை அசால்டாக கேட்டார் நெல்சன். ‘வீட்ல 4 கார் இருக்கும்போது அதையெல்லாம் தாண்டி ஏன் ஓட்டு போட சைக்கிள்ல போனீங்க’ என்பதே அந்த கேள்வி. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க விஜய் சைக்கிளில் சென்றது பெரும் பரபரப்போடு பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியது. பெட்ரோல் விலை ஏற்றத்தை கண்டித்து விஜய் செய்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் என ஒரு சாராரும், கருப்பு சிவப்பு நிற சைக்கிளில் சென்றது திமுகவுக்கு ஆதரவான மாஸ்டர் ஸ்ட்ரோக் என இன்னொரு சாராரும் அவரவர் வசதிக்கேற்ப டீக்கோட் செய்துகொண்டிருந்திருந்தனர். அந்த சைக்கிள் கேப்பின் மையத்தில் புகுந்த மநீம அபிமானிகள், ‘சைக்கிளில் டார்ச் லைட் இருப்பதால் இது கமலுக்கு ஆதரவான செண்டர் ஸ்ட்ரோக்’ போன்ற அரியவகை கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்திக்கொண்டிருந்தனர்.


ஆக இப்பேட்டியின் மூலம், வீட்டில் இருந்த 4 காரை தாண்டி விஜய் ஏன் அந்த சைக்கிளை எடுத்தார்? சைக்கிளில் சென்றவர் வீடு திரும்பும்போது காருக்கு தாவியது ஏன்? அந்த சைக்கிள் அதன்பிறகு என்னவானது போன்ற பல்வேறு கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள விஜய் ரசிகர்களுடன் திமுக, மநீம போன்ற கட்சிகளின் அபிமானிகளும் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. பேட்டியின் இடையில், நாம அடுத்த கேள்விக்கு போலாமா? என விஜய் கேட்பதன் மூலம் இன்னும் பல்வேறு கிடுக்குப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில், விஜய் – அஜித் ரசிகர்களின் இணைய மோதல்கள், ட்ரால்கள், பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பங்கெடுத்தது, விஜய் அரசியல் வருகை உள்ளிட்ட சுவாரசியமான கேள்விகளும் இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.


சைக்கிள் தொடர்பாக நெல்சன் கேட்ட இதே கேள்வியைத்தான் தேர்தலின்போது பலரும் எழுப்பினர். அப்போது அவர்களையெல்லாம் பாய்ந்து பாய்ந்து தாக்கிக்கொண்டிருந்த விஜய் ரசிகர்கள், இப்போது அதே கேள்வியை நெல்சன் கேட்கும்போது ஹார்ட்டின்களோடு ஃபயர் எமோஜிகளையும் பறக்கவிட்டு ட்ரெண்ட் செய்வதை எப்படி புரிந்துகொள்வது என தெரியாமல் சமூக ஆர்வலர்கள் பலரும் குழம்பிவருகின்றனர். இதற்கிடையில் பேட்டியின்போது நெல்சன் மற்றும் விஜய் கொடுத்த நவரச ரியாக்‌ஷன்கள் அனைத்தும் இந்த மாதத்திற்கான மீம் டெம்ப்ளேடுகளாக சமூகவலைதளங்களை அலங்கரித்து வருகிறது.

  • வேல் பிரசாந்த்
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரை கவுரவப்படுத்திய கூகுள்

Vandhana

பாடப் புத்தகங்களில் சாதிப் பெயர்களை நீக்கியது தமிழ்நாடு அரசு

Halley Karthik

“கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” – அமைச்சர் பொன்முடி

Halley Karthik