நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு ’பீஸ்ட்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
’மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ’கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படம், விஜய்-க்கு 65-வது படம். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள பூஜா ஹெக்டே, 2012-ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் தமிழில் வெளியான ’முகமூடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர். சில இந்திப் படங்களிலும் நடித்துள்ள பூஜா ஹெக்டே விஜய் ஜோடியாக இதில் நடிக்கிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, ஜார்ஜியாவில் நடைபெற்றது.
அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, நடிகர் விஜய், தனது பிறந்த தினத்தை நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, தளபதி 65 படத்தின் டைட்டிலையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. படத்துக்கு ’பீஸ்ட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இது வாத்திங் கம்மிங் பாடலில் இடம்பெறும் வார்த்தை.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் பனியன் அணிந்தபடி, துப்பாக்கியுடன் மிரட்டலாக நிற்கிறார். விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் டைட்டிலும் வெளியானதை அடுத்து, சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.







