மீண்டும் மருத்துவமனையில் விஜயகாந்த்! வழக்கமான பரிசோதனைக்காக அனுமதி என தேமுதிக விளக்கம்!

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்து…

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.

அண்மை காலமாக வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. நுரையீரல் நிபுணர்கள் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து கடந்த 12-ம் தேதி தான் விஜயகாந்த் வீடு திரும்பினார்.தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில், அவர் மீண்டும் நேற்று மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக தரப்பில் நேற்று (26.12.2023) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது:

“தேமுதிக தலைவர் விஜயகாந்த் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் (28.12.2023) வீடு திரும்புகிறார்” என தேமுதிக தரப்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.