கேரளாவில் ’லியோ’ திரைப்படம் முதல் நாளில் மட்டும் 2,263 காட்சிகளுடன் வெளியாவதாகவும், இதுவரை எந்த ஒரு மலையாள நடிகருக்கும் இத்தனைக் காட்சிகள் ஒதுக்கப்பட்டதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. லியோ படம் நாளை வெளியாக உள்ளது.
லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொடங்கி அதிகாலை காட்சி வெளியிடுவது வரை பெரும் சிக்கல்கள். முதலில் நேரு விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட லியோ இசை வெளியீட்டு விழாவை படக்குழு ரத்து செய்தது. அத்துடன் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது, 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிட வேண்டும் என்பது அரசின் விதி என்றால் அதனை மீற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், கேரளத்தில் லியோ திரைப்படம் முதல் நாளில் 2,263 காட்சிகளுடன் வெளியாகிறது. இதுவரை எந்த ஒரு மலையாள நடிகருக்கும் இத்தனைக் காட்சிகள் ஒதுக்கப்பட்டதில்லை என்றும் முன்பதிவு வாயிலாக மட்டுமே லியோ ரூ.5.4 கோடியை வசூலித்திருக்கும் எனக் கூறுகின்றனர். மலையாள சினிமாவில் தற்போதைய வசூல் மன்னனாக இருக்கும் துல்கர் சல்மானின் ‘கிங்க் ஆஃப் கொத்தா’ திரைப்படம் முன்பதிவு வாயிலாக ரூ.3.43 கோடியைத் தான் வசூலித்தது.
அதே நேரம், ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படம் கேரளத்தில் முதல்நாள் வசூலாக ரூ.5.85 கோடி வசூலித்திருந்தது. ஆனால் கேரளத்தில் உச்ச நட்சத்திர நடிகர்களான மோகன்லால், மம்மூட்டிக்குக் கிடைக்காத வரவேற்பு தமிழ் சினிமாவைச் சேர்ந்த விஜய்க்குக் கிடைத்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும், கேரளத்தில் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு துவங்குவதால் தமிழ்நாட்டில் இருந்து பல ரசிகர்கள் அங்கு முன்பதிவு செய்திருப்பார்கள் என்பதால், விஜய்யின் லியோ சாதனைகளைச் செய்ய காத்திருக்கிறது.







