நடிகர்கள் விஜய் மற்றும் கார்த்தி நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்து வருகிறது.
நடிகர் விஜய் இப்போது ’பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.
இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. பின்னர் சென்னை பூந்தமல்லி அருகே படத்துக்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்ட நிலையில், கொரோனா 2 வது அலை பரவியது.
இதனால் பிறப்பிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக, படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், படப்பிடிப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதையடுத்து, விஜய் நடிக்கும் ’பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் காட்சிகள் அங்கு படமாகி வருகின்றன.
இந்நிலையில், ’பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங் நடக்கும் அதே ஸ்டூடியோவில் கார்த்தி நடிக்கும் ’சர்தார்’ படத்தின் ஷூட்டிங்கும் நடக்கிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் 2 மாதங்களுக்குப் பிறகு தொடங்கியுள்ளது. இப்போது ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னும் நான்கு நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய், கார்த்தி நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஒரே ஸ்டூடியோவில் நடைபெறுவதால், இருவரும் சந்தித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.







