பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி ஆகியவற்றின் வாயிலாக கொரோனா மூன்றாவது அலையை தடுக்கலாம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
“நாட்டில் கடந்த வாரம் 6 மாநிலங்களில் இருந்துதான் 80 சதவீதம் அளவுக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பது பெரும் கவலையளிக்கிறது. எனவே இந்த மாநிலங்களில் மூன்றாவது அலை வரக்கூடிய சாத்தியக்கூறுகளைத் தடுக்க போதுமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை மற்றும் கொரோனா தடுப்பூசி ஆகிய நமது யுக்தியை மேலும் அதிகமாக முன்னெடுக்க வேண்டும். நுண்ணிய அளவிலான நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். இதில் பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.
மாநிலங்களில் படுக்கை வசதிகள், அவசர சிகிச்சை பிரிவுகள், பரிசோதனைகள் அதிகரித்தல் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். கொரோனா தடுப்பு சிறப்பு திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.23,000 கோடியை விடுவித்துள்ளது.” இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார்.







