வியட்நாம் படகு விபத்து – 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்!

வியட்நாம் படகு விபத்தில் சிக்கி 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வியட்நாம் நாட்டில் பல்வேறு தீவுகள், சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது. இந்த சுற்றுலா தலங்களுக்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உள்பட 32 சுற்றுலா பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் வியட்நாமின் ஹு கியுஹ் தீவுக்கு 35 பேர் இன்று காலை 11 மணியளவில் படகில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

அப்போது மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் 18 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. இதனிடயே விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் வியட்நாம் படகு விபத்தில் சிக்கி 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது. மேலும், விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களில் ஒருவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருகபிரபு என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து வியட்நாம் படகு விபத்து தொடர்பாக ஹோ சி மின் (Ho Chi Minh) நகரத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, 84 36 281 7930, 84 91 552 37 14, 84 33 452 0414 ஆகிய உதவி எண்களை அறிவித்துள்ளது. மேலும் ஹனோய் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள 84 91 308 9165 என்ற தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.