இந்திய வீரர்களை பாகிஸ்தான் ஜெர்சியில் சித்தரித்து, பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணியை பொறுத்தவரை பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவுடனான முதல் போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, நேற்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் படுதோல்வி அடைந்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பானது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
நேற்றைய தோல்விக்கு பின்னர் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், இனி எங்களின் அரையிறுதி வாய்ப்பு மற்ற அணிகளின் கைகளில் தான் இருக்கிறது என்று கூறியிருந்தார். எனவே பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைய வேண்டும் என்றால், வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெறவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாகிஸ்தான் அணி ரசிகர்கள், இந்திய அணி வீரர்களை பாகிஸ்தான் ஜெர்சியில் இருப்பது போல கிராஃபிக்ஸ் மூலம் சித்தரித்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை சிலர் விளையாட்டாக எடுத்துக்கொண்டாலும், பலர் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.