”பாகிஸ்தானிடம் தோற்றிருந்தால் கிரிக்கெட்டிலிருந்தே விலகியிருப்பேன்”- அஸ்வின்

உலக கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றிருந்தால் தாம் கிரிக்கெட் உலகிலிருந்தே ஒய்வு பெற்றிருப்பேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.  உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில்…

உலக கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றிருந்தால் தாம் கிரிக்கெட் உலகிலிருந்தே ஒய்வு பெற்றிருப்பேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். 

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதின.  மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி இலக்கை அடைந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 159 ரன்களை எடுத்தது. இதையடுத்து 160 ரன்கள் என்கிற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில் விராத் கோலி அதிரடியாக விளையாடி 82 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்றார். கடைசி ஓவரில் தினேஷ்கார்த்திக் அவுட்டான நிலையில் கடைசி பந்தில் விளையாட ரவிச்சந்திரன் அஸ்வின் களம் இறங்கினார். இந்திய அணி வெற்றி பெற அந்த பந்தில் ஒரு ரன் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கிய அஸ்வின், அந்த பந்தில் வின்னிங் ஷாட் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்நிலையில் இந்த போட்டி குறித்த அனுபவத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரிஷிகேஸ் கனிட்கரிடம்  பேட்டி ஒன்றில் அஸ்வின் பகிர்ந்துகொண்டார். அப்போது அந்த கடைசி பந்தில் ரன் எடுக்காமல் அவுட் ஆகியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, உடனடியாக மைதானத்தில் உள்ள வீரர்களின் அறைக்குச் சென்று கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெறும் முடிவை டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருப்பேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.